தமிழக முதல்வர் தலைமையில் மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர், வன அலுவலர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. நடக்கப்போகும் இந்த மாநாட்டில் வனத்துறை தொடர்பான திட்டங்களை முதல்முறையாகத் தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார்.
மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை என மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை ஆட்சியர்கள் மூலம் அறிந்து திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை அறிந்து கொள்வதற்கும், அவற்றைச் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்த இந்த மாநாடு வழிகோலும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.