கிருஷ்ணகிரியில், பழைய தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் பழைய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜன. 28ஆம் தேதியன்று, அந்த வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, புதுப்பிக்கும் வேலைகள் நடந்தன. கட்டிகானப்பள்ளி அருகே உள்ள கீழ் புதூரைச் சேர்ந்த வெங்கடாசலபதி (40), முருகன் (55), சத்யசாய் நகரைச் சேர்ந்த பெரியசாமி (52) ஆகிய கட்டடத் தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தத் தொட்டி 10 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இந்தத் தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் மூவரும் வேலை செய்துகொண்டிருந்தனர். நீண்ட நேரமாகியும் மூவரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். உள்ளே எட்டிப் பார்த்தபோது 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிக் கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களைப் பரிசோதனை செய்ததில், பெரியசாமி, முருகன் ஆகிய இருவரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. வெங்கடாசலபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில், நீண்ட காலமாக பயன்பாடற்று கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் விஷ வாயு உற்பத்தி ஆகியுள்ளது. தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள், விஷ வாயுவை சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.