நாங்கள் அரசைக் கலைக்கவேண்டும் எனச் செயல்படவில்லை என்று தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மாரியப்பன் கென்னடி, டாக்டர். கதிர்காமு, முத்தையா, தங்கதுரை, "18 சட்டமன்ற உறுப்பினர்ககள் டி.டி.வி. தினகரனை நம்பிப் போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் எனக் கூறுவது தவறானது. ஓ.பி.எஸ். எதிர்த்தபோது அம்மாவின் ஆட்சியை உருவாக்க அனைவரையும் ஒன்றிணைத்து இந்த ஆட்சியை உருவாக்கியவர் டி.டி.வி. தினகரனும், சசிகலாவும்தான். நாங்கள் அரசைக் கலைக்க வேண்டும் எனச் செயல்படவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் எதிர்த்தோம். நாங்கள் நடுரோட்டில் இல்லை. எங்களுக்கு டி.டி.வி. தினகரன் உயர்பதவி வழங்கி அழகு பார்க்கிறார்.
18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ததே எடப்பாடிதான். அவரை தேர்வுசெய்த எங்களை தகுதிநீக்கம் செய்துவிட்டார். பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி தவறான தகவல்களைக் கூறுகிறார். மனசாட்சியை அடமானம் வைத்துப்பேசி வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி தருவார்கள். முதல்வர் மற்றும் சி.வி.சண்முகத்தின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தன்னிடம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்க வைப்பதற்காக டி.டி.வி.தினகரன் மீது பழி சுமத்துகிறார் எடப்பாடி.
எடப்பாடி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மட்டும்தான் சசிகலாவையும் டி.டி.வி. தினகரனையும் எதிர்க்கின்றனர். சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவியும், ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பதவியும், எடப்பாடிக்கு முதல்வர் பதவியும் அளித்தவர் சசிகலா. எடப்பாடி சசிகலாவிற்குத் துரோகம் செய்து கழுத்தறுத்துவிட்டார். சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகப்பெரிய சாதனை. தொண்டர்கள் தங்களது சொந்தச் செலவில் நேரில் வரவேற்க வந்தனர். சசிகலா தலைமையில் அ.தி.மு.க. செயல்பட்டால் ஆட்சியை உருவாக்க முடியும். இல்லையெனில் அ.தி.மு.க. தோல்வியடையும். அதிகாரம் வேண்டும் என்ற பயத்தில் சசிகலாவை எதிர்க்கின்றனர். மனசாட்சி இன்றி அமைச்சர்கள் பேசி வருகின்றனர்" என்று கூறினார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். கதிர்காமு, "சசிகலாவிற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அச்சத்தில் எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார் எடப்பாடி. நாங்கள் 18 பேரும் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி நடுரோட்டிற்குச் சென்றிருப்பார். ஆட்சியை ஒப்படைத்த சசிகலாவிற்கும், ஆதரவளித்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் உண்மையாக இல்லாத எடப்பாடி தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்" என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து பேசிய அ.ம.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் கே.கே.உமாதேவன், "சி.வி.சண்முகத்தின் பேச்சு கண்டிக்கத்தக்கது. பதவி வெறிபிடித்து பதட்டத்தால் அநாகரிகமாகப் பேசி வருகின்றார். பதவி தந்தவர்களையே பேசுவது அநாகரிகமானது. அம்மாவின் ஆட்சியைப் பாதுகாக்க வாக்களித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க.விற்கு ஆதரவாக வாக்களித்த 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகொடுத்து துரோகம் இழைத்தவர் எடப்பாடி. அ.தி.மு.க.வை கட்டுக்கோப்போடு வழிநடத்த முயல்பவர் டி.டி.வி. தினகரன். பெருந்தன்மையோடு முதல்வரை வழிநடத்தியவர் டி.டி.வி. தினகரன்" என்றார்.