காட்சிக்கு வருகிறது மலையூர் மம்பட்டியான், வீரப்பன் பயன்படுத்திய துப்பாக்கிகள்
தமிழக காவல்துறையின் சார்பில் கோவையில் அமைக்கப்பட்டு வரும் காவலர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர், சந்தனக் கடத்தல் மன்னனாக திகழ்ந்த வீரப்பன், மலையூர் மம்பட்டியான் ஆகியோர் பயன்படுத்திய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
கோவை இரயில் நிலையம் எதிரே உள்ள ஹாமில்டன் கிளப்பை புதுப்பித்து அங்கு காவலர் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், காவல் துறையினர் பல்வேறு காலகட்டங்களில் அணிந்த சீருடைகள், பயன்படுத்திய ஆயுதங்கள், பல்வேறு வகையான துப்பாக்கிகள், தோட்டாக்கள் போன்றவை இடம் பெற உள்ளன.
மேலும், தீயணைப்பு இயந்திரங்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள், பீரங்கிகள் போன்றவற்றுடன் இராணுவத்தில் பயன்படுத்தும் மிக் ரக போர் விமானமும் இடம்பெறும் என்று ஏற்கெனவே காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய துப்பாக்கிகள், கையெறி கொண்டுகள் உள்ளிட்ட சில தளவாடப் பொருள்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சேலத்தில் உள்ள ஆயுதப்படை கிடங்கில் இருந்து மம்பட்டியான் பயன் படுத்திய துப்பாக்கி, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை கிடங்கில் இருந்து வீரப்பன் சுட்டுகொல்லப்பட்ட போது, வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திராகவுடர் மற்றும் சேதுமணி ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகளை கோவைக்கு கொண்டுவரும் வேளையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவசுப்பிரமணியம்