தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு 25 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுள்ள பல்வேறு ரசாயன பூச்சி, பூசன மருந்துகள் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு, இதன்மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வணிகத்தை ஒழுங்குபடுத்தவும், போலி மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதைத் தடுக்கவும் பூச்சிக்கொல்லி சட்டம் இயற்றப்பட்டு பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் 12 பூச்சிக்கொல்லி தர ஆய்வகங்கள் மற்றும் 38 மையங்கள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 1983-ல் தொடங்கப்பட்ட பூச்சிக்கொல்லி ஆய்வகம், தேசிய தர நிர்ணய வாரியத்தின் சான்று பெறும் வகையில் 2018-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையமாகச் செயல்பட்டு வருகிறது.
இத்துறையின் உரிமம் பெற்று பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி, மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் அலுவலர்களால் ஆண்டொன்றுக்கு 7,200 மாதிரிகள் இலக்கீடாக நிர்ணயம் செய்யப்பட்டு, மாதந்தோறும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி குறியீட்டு மையத்திற்கு அனுப்பப்படுகின்றன. அதன்பிறகு முறைகேடு ஏதும் நடைபெறாத வகையில் ரகசியம் காக்க, உற்பத்தி நிறுவனத்தின் பெயர், மாதிரி தயாரிக்கப்பட்ட மாவட்டத்தில் வரவழைக்கப்பட்டு பிரதேச எண் அளிக்கப்பட்டு பூச்சிக்கொல்லி ஆய்வகங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கைகள் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த ஆய்வுகளில் தரமற்றவை எனக் கண்டறியப்பட்ட குறிப்பிட்ட பூச்சிக்கொல்லிகளின் குறிப்பிட்ட தொகுப்பு அணியில் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த அளவையும் முடக்கி, அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தரமற்ற பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்த நிறுவனத்தின் மீதும் அவற்றை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயிர்பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட பூச்சிக்கொல்லி ஆய்வகம் மூலம் இதுவரை 37,500 பூச்சிக்கொல்லி மருந்துகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 310 மருந்துகள் தரமற்ற பூச்சிக்கொல்லிகள் எனக் கண்டறியப்பட்ட நிலையில், பயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதனைத் தயாரித்த 15 நிறுவனங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் தரமான பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்படுவதாக மாநில கடலூர் பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.