தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது எனக்கூறி அரசாங்கம் பொது போக்குவரத்தை அனுமதித்துள்ளது. தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தது 5 மாவட்டங்கள் அதிகபட்சம் 7 மாவட்டங்கள் உள்ளடக்கியதாக உள்ளது. அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலம், திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை கொண்ட 7 மற்றும் 8 வது மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் அரசு பேருந்துகள் மட்டும் இயங்கிக்கொண்டுள்ளன.
மண்டலங்களில் பேருந்துகள் இயங்கும்போது தான் பொதுமக்களிடம் அதிருப்தியையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்ட மக்களும், வேலூர் மாவட்ட மக்களும் கொதிப்பில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அலுவல், மருத்துவம் மற்றும் பணி ரீதியாக வேலூர் மாவட்டத்துக்கே அதிகம் பயணம் செய்வார்கள். அதற்கடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பயணமாவார்கள்.
ஆனால் திருவண்ணாமலை மாவட்டம் என்பது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 4வது மண்டலமாக உள்ளது. வேலூர் மாவட்ட, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் மண்டலம் 2 ல் உள்ளது.
மண்டலங்களுக்குள் மட்டும்மே பேருந்துகள் இயக்கம் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் வேலூர்க்கு செல்ல முடியவில்லை. வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் வரமுடியாமல் தவிக்கின்றனர். அதேபோல் தொழில் மற்றும் வேலை ரீதியாக திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அதிகம் பயணம் செய்வார்கள். அந்த மாவட்டம் வேறு மண்டலத்துக்குள் வருவதால் அங்கும் அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அதிகம் செல்லாத கடலூர், கள்ளக்குறிச்சிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்துகள் காலியாகவே செல்கின்றன என்பது குறிப்பிடதக்கது.
திருவண்ணாமலை மாவட்ட மக்கள் வேலூர் செல்ல திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி பகுதிகளில் இருந்து மாவட்ட எல்லையான கண்ணமங்களம் வரை இயக்கப்படும் பேருந்துகளில் சென்று அங்கிருந்து நடந்து வேலூர் மாவட்ட எல்லையான பள்ளிப்பட்டு பகுதிக்கு நடந்து சென்று பேருந்து ஏறி சென்றுவந்தனர். தற்போது வேலூர் மாவட்ட நிர்வாகம் பள்ளிப்பட்டு வரை இயக்கிய பேருந்துகளை 10 கி.மீ தூரத்துக்கு முன்பே கணியம்பாடியோடு நிறுத்திவிட்டது. இதனால் திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசியில் இருந்து வேலூர் சென்ற பொதுமக்கள் செல்ல முடியாமல் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். சி.எம்.சி , வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்களும் பொதுபோக்குவரத்து வசதி இல்லாததால் தடுமாறுகின்றனர்.
போக்குவரத்து அனுமதி அளிக்கும்போது, எந்தந்த மாவட்ட மக்கள் அருகில் உள்ள எந்த மாவட்டத்துக்கு அதிகமாக பயணம் மேற்கொள்கிறார்கள் என அறிந்து அதன்படி மண்டலம் பிரிக்காமல் தான்தோன்றி தனமாக பிரித்துவிட்டு இப்படி அலையவிடுவது எந்தவிதத்தில் சரி என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், மண்டலங்களை கலைத்துவிட்டு கரோனாவுக்கு முன்பு எப்படி பேருந்துகள் இயக்கப்பட்டதோ அதன்படி பொதுபோக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கையும் விடுக்கின்றனர்.