
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் அங்கு நிகழ்ந்த கலவரத்தின் காரணமாக பள்ளி மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவுற்றதால் பள்ளியைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கொடுத்த பரிந்துரையை ஏற்று சீரமைப்பு பணிகள் முழுமையாக நடந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
ஒரு மாதத்திற்கு இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அதன் பிறகு மற்ற வகுப்புகளை நடத்துவது குறித்து முடிவெடுக்கலாம் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதால் பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு வேண்டுமென்றால் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம். எந்த தேதியில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்பதை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து ஆலோசித்து வரும் திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.