
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றிய செயலாளரும் அம்பிளிக்கை ஊராட்சி மன்றத் தலைவருமான நடராஜன் நெய் வியாபாரமும் செய்து வருவதால், அவரிடம் டிரைவராகவும் பணம் வசூல் செய்யும் வேலையும் பலர் பார்த்து வருகிறார்கள்.
அப்படி வேலை பார்த்து வந்த அம்பிளிக்கையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைக் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு, அம்பிளிக்கை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து எரித்து சாம்பல் கூட இல்லாமல் ஒரு கும்பல் எடுத்துச் சென்று விட்டனர் என்ற தகவல் ஊரில் உள்ள சிலர் மூலம் போலீஸின் காதுக்கு எட்டியது. அதன் அடிப்படையில்தான் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், பாலகுமாரசாமி, சரவணக்குமார் கொண்ட தனிப்படை தேடுதல் வேட்டையில் இறங்கியது. இதில், இரண்டே நாளில் குற்றவாளிகளான வடிவேல் உள்பட ஆறு பேரைக் கைது செய்தனர். முதல் குற்றவாளியான வடிவேல், கொலை செய்யப்பட்ட சுரேஷின் தாய்மாமன் என்பது தெரியவந்தது.

இப்படி அம்பிளிக்கை ஊர் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட சுரேஷ், கொலை செய்யப்பட்ட பின்பு தான் எரித்திருக்கிறார்கள். அதை அவருடைய தாய் மாமனான வடிவேல் தான் செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட சுரேஷ் கன்னியாகுமரி, திருப்பூர், கோவை உள்பட சில இடங்களில் உள்ள பைனான்ஸ்களில் வேலை பார்த்து வந்தபோது, சில லட்சங்களைக் கையாடல் செய்திருக்கிறார். அந்தப் பணத்தை எல்லாம் தாய் மாமனான வடிவேல் தான் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அதன்பின் சுரேஷை கண்டித்து தான் வேலை பார்க்கும் நடராஜன் நெய் கம்பெனியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்த்திருக்கிறார். அப்படி இருந்தும் வசூல் பணம் ஆறு லட்சத்தை கம்பெனியில் கட்டாமல் எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கம்பெனி மேனேஜர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து நடராஜனும், இன்ஸ்பெக்டரை ஃபோனில் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். மேலும், தன்னிடம் வேலை பார்க்கும் வடிவேலுவைக் கூப்பிட்டு, உன் மாப்பிள்ளையை அழைத்து வா என்று கூறிய போதுதான் தென்காசியில் பதுங்கி இருந்த சுரேஷ்சை வடிவேலுவும் அவரது நண்பர்களும் அழைத்து வந்தனர். அப்பொழுது அவரிடமிருந்த மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை வடிவேல் தருவதாகக் கூறியதன் பேரில், சுரேஷ் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் வெளியே விட்டுவிட்டனர். பின்னர், பணம் கேட்டு கம்பெனி உரிமையாளரான நடராஜன் வடிவேலுவை டார்ச்சர் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், வடிவேலு தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓடைப்பட்டி தோட்டத்தில் இருந்த சுரேஷை அளவுக்கு அதிகமாக மதுவைக் குடிக்க வைத்து நிதானம் இல்லாத அளவுக்கு கொண்டு சென்று, கழுத்தில் கயிறைப் போட்டு இறுக்கிக் கொலை செய்து விட்டுத் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, சுரேஷ் உடலைக் காரில் ஏற்றி வந்து ஊரில் உள்ள உறவினர்களிடம் காட்டிவிட்டு, சுடுகாட்டுக்கு கொண்டு போய் எரித்து விட்டுத் தலைமறைவாகி விட்டனர். மேலும், சுரேஷை சுடுகாட்டில் எரிப்பதற்குத் தேவையான டயர் மற்றும் விறகுகளும் நடராஜனுக்கு சொந்தமான வேனில் கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து வடிவேலுவையும் அதற்குத் துணை போன கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் வடிவேலுவை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது என்.பி.என். நெய் கம்பெனியின் உரிமையாளரான ஒட்டன்சத்திரம் அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜன் தூண்டுதலின் பேரில் தான் எனது மாப்பிள்ளையான சுரேஷை தனது நண்பர்கள் மூலம் கொலை செய்தேன் என்று வடிவேலு விசாரணையில் கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜன், சுரேஷை கொலை செய்யத் தூண்டி இருக்கிறார் என்ற அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விஷயம் நடராஜன் காதுக்கு எட்டவே பெங்களூருவில் தலைமறைவாகிவிட்டார். இந்த விஷயம் போலீசாருக்குத் தெரியவரவே, டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், இளஞ்செழியன் உள்பட தனிப்படை பெங்களூருக்குச் சென்று தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னையில் உள்ள கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பகுதியில் தலைமறைவான நடராஜன் உலாவி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், இளஞ்செழியன் உள்பட தனிப்படையினர் கோயம்பேட்டில் உள்ள பஸ்களில் சோதனை செய்தபோது, வெளிமாநிலத்திற்கு செல்லும் பேருந்தில் தப்பிச் செல்ல முயன்ற நடராஜனை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நடராஜனை ஒட்டன்சத்திரம் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து மேலும் விசாரணை செய்ய உள்ளனர். இச்சம்பவம் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.