திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய அளவிலான தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கழிவுகள் அரசால் தடை செய்யப்பட்ட பெரிய அளவிலான பிளாஸ்டிக் பைகளில் நாள்தோறும் மூட்டைகளாகக் கட்டப்பட்டு மருத்துவமனைகளின் முன்பு அடுக்கி வைக்கப்படுகிறது. இதனை தினசரி துப்புரவு ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு அண்ணாநகரில் உள்ள யூனியன் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்கின்றனர்.
மருத்துவ கழிவுகளை தனியாக வைக்க வேண்டும் என்ற விதி இருந்தும், இதில் அலட்சியம் காட்டும் பேரூராட்சி ஊழியர்கள் மருத்துவமனையிலிருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளில் இருந்து மருந்து அட்டைப்பெட்டிகளை தனியாக எடுத்து சென்று விற்றால், ஒரு குவாட்டருக்கு காசு கிடைக்குமே என ஆசைப்பட்டு அந்த குப்பை பண்டல்களை கையோடு பிரித்து சாதாரண குப்பைகளோடு கலந்து விடுகின்றன. இதனால் மறு சுழற்சிக்கு கொண்டு செல்லும் இடத்தில் திடக்கழிவு மேலாண்மை ஊழியர்களுக்கும் குப்பை கிடங்கு அருகே வசிக்கும் பொது மக்களுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற செயல்களில் ஈடுபடும் பேரூராட்சி ஊழியர்களை துப்புரவு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இவர்களின் அலட்சியத்தால் பொது மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். திண்டுக்கல் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகமோ எதை பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து மெத்தன போக்கை கடை பிடித்து வருகிறது.