தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க எடப்பாடி அரசு அனுமதி கொடுத்ததின் பேரில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு குடிமகன்கள் சரக்குகளை வாங்கிச் சென்று வருகிறார்கள்.
அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 250 கடைகளில் 125 மேற்பட்ட கடைகள் தான் திறக்கப்பட்டது காலை 10 மணிக்கு கடைகள் திறந்து கூட அந்தந்த கடைகளுக்குச் சரக்கு வர காலதாமதம் ஆனதால் டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட வரிசையில் இன்று சரக்குகள் வந்தபின் வாங்கிச் சென்றனர்.
திண்டுக்கல் மாநகரில் உள்ள 20 கடைகளில் பதினொரு கடைகள் மட்டும் திறந்து இருந்ததால் அதிகாலையே குடிமகன்கள் வரிசையில் நின்று கடைகள் திறந்த பின்பு டோக்கன் அடிப்படையில் சரக்குகளை வாங்கிச் சென்றனர். ஆனால் கோர்ட் உத்தரவுப்படி குடிமகன்களுக்கு வயதுக்குத் தகுந்த மாதிரி சரக்குகளை விநியோகம் செய்யாமல் அனைத்து தரப்பினருக்கும் சரக்குகளைக் கொடுத்தனர்.
இதைப்பற்றி சரக்கு வாங்கிய குடிமகன் பிரபுவிடம் கேட்டபோது, ஆதார் கார்டை காண்பித்தவுடன் அதில் உள்ள நம்பர் குறித்து கொண்டு ஒரு நபருக்கு புல் அடிப்படையில் 4 குவாட்டர் கொடுக்கிறார்கள். அதுவும் நாம கேட்கிற சரக்கு கிடையாது. ஒன்னுக்கும் ஆகாத சரக்கை தான் கொடுக்கிறார்கள். அதுவும் கூட 105 ரூபாய்க்கு வாங்கக் கூடிய சரக்கை 125 ரூபாய்க்குக் கொடுக்கிறார்கள். அதன் மூலம் ஒரு ஆள் ஒன்றுக்கு 80 ரூபாய் வீதம் கூடுதலாக வசூல் செய்கிறார்கள் இப்படிப்பட்ட சரக்குகள் மூலம் போதை ஏறும் தவிர உடல் நலத்துக்குப் பாதிப்பு தான் ஏற்படும். இருந்தாலும் வேறு வழியில்லாமல் வாங்கிக் குடிக்கிறோம் என்று கூறினார்.