திண்டுக்கல் அருகே தலை துண்டித்து வாலிபரைக் கொலை செய்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று திண்டுக்கல் அருகே உள்ள ஆனந்தன் கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியை மர்மநபர்கள் வெட்டி தலைவன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வீசி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வட்டப்பாறை அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அருகே அவரது உடல் கிடந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமாருக்கும், சிவனுக்கும் சட்டவிரோதமாக சில்லறையில் மதுபானங்கள் விற்பனை செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தலையை வீசி சென்ற இடத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி. சீனிவாசன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. அருண் கபிலன் மேற்பார்வையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தினகரன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை வலை வீசித் தேடி வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன் கார்த்திகேயன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சங்கரபாண்டி, மருதீஸ்வரர், தேனியைச் சேர்ந்த ராம்குமார், மணிகண்டன், ராஜா ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் அனைவரும் மதுபான விற்பனையில் கைதான அனுமன் கோட்டையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இன்பராஜின் கூட்டாளிகள் ஆவர். அதோடு இன்பராஜ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11,500 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை காவல்துறையினருக்கு ஸ்டீபன் தான் தெரிவித்திருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்தனர். அதனால் அனுமந்தராயன் கோட்டையில் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று மாலை மது குடித்துக் கொண்டிருந்த ஸ்டீபனை மேற்படி கும்பல் வெட்டியது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.