கோடை காலத்தில் தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்குமா? என்பது குறித்து திண்டுக்கல் கால்நடை முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறியதாவது, நம் நாட்டில் தனிநபர் முட்டை உன்னும் சராசரி அளவு ஆண்டுக்கு 118 என்று வரையறை செய்து இருந்தாலும் ஒருவர் 85 முட்டைகளை மட்டுமே சாப்பிடுகிறார். இதில் வைட்டமின் 'சி' யை தவிர எல்லா வைட்டமின்களும் உள்ளன. மஞ்சள் கருவில் 230 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது.
தினமும் இரண்டு முட்டை உணவில் சேர்த்துக் கொண்டால் 11 கிராம் கொழுப்புச் சத்து கிடைக்கும். முட்டை சாப்பிட்டால் இதய நோய் வராது. முட்டையில் ஒரு சதவீதம் மட்டுமே மாவுச்சத்து இருக்கிறது. இது 80 கிலோ எரி சக்தியை மட்டுமே தரவல்லது. அதனால் முட்டை சாப்பிட்டால் உடலில் அதிக வெப்பம் ஏற்படுவதில்லை.
இந்த கரோனா காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப் படுகிறது. புரதங்கள் நோய்எதிர்ப்பு சக்தியை தருகின்றன. முட்டையின் வெள்ளை கரு மிகக் சிறந்த புரதம். மனிதனுக்கு தினமும் 70 கிராம் புரதச் சத்து தேவைப்படுகிறது. இதில் 20 கிராம் புரதம் பிராணி வகைகளிலிருந்து கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை சாப்பிடுவது அவசியம் என்று கூறினார்.