திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இருக்கும் சிங்காரக்கோட்டை ஒட்டுப்பட்டி பிரிவு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லுக்கு தினந்தோறும் தொழிலாளர்களை வேனில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்த வேனின் டிரைவராக வத்தலகுண்டைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல் இன்று (29/03/2021) காலை 20 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மில்லுக்குச் சென்று கொண்டிருந்த வேன், சேவகம்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. வேனுக்குள் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து இடிபாடுகளில் சிக்கினர். இடிபாடுகளில் சிக்கிய வேன் டிரைவர் சுரேஷ், சுகுணா, லதா, காளிதாஸ் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றவர் கூச்சலிட அப்பகுதி மக்கள் ஓடி வந்து வேனுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு வத்தலகுண்டு மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில், 15 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் கவலைக்கிடமாக இருந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் பலியான சுரேஷ், லதா, காளிதாஸ் ஆகிய மூன்று பேரும் திருமணம் ஆகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.