திண்டுக்கல், நிலக்கோட்டை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதிக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் வணங்காமுடி கூறும்போது, நேற்று மாலை நிலக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தங்களது வழக்கறிஞர் சங்க கட்டிடத்தின் முன்பு வழக்கறிஞர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தபோது, வழக்கறிஞர்கள்மீது மோதுவதுபோல் அந்த வழியாக மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் வந்தார்.
மேலும் அந்த இளைஞர் அதிவேகமாக குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி குடியிருப்புக்குள் நுழைந்து விட்டார். வழக்கறிஞர்கள் அனைவரும் அதிவேகமாக வந்த இளைஞன் குறித்து விசாரிக்க நீதிபதி குடியிருப்புக்கு சென்றபோது அங்கிருந்த சிலர் வழக்கறிஞர்களை விரட்டியதாகவும், அப்போது அங்குவந்த நீதிபதி வீட்டினுள் இருந்தவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்களை மிரட்டியதாகவும் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் இன்று காலை நடந்த வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, வழக்கறிஞர்களை மிரட்டிய நீதிபதியை பணிமாற்றம் செய்ய வலியுறுத்தி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வழக்கறிஞர்கள் வேலை புறக்கணிப்பால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டும் வருகிறது.