Skip to main content

கூட்டணி கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி - அதிருப்தியில் திமுகவினர்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

திண்டுக்கல் தொகுதியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் சீட்டுக்காக மல்லு கட்டி வந்தனர். சிட்டிங் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினரான வேலுச்சாமி கடந்த தேர்தலில் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கியதின் பேரில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வாங்கி முதல் இடத்தை பிடித்த பெருமையும் இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடித்த பெருமையும் பெற்றார். அந்த அளவிற்கு திண்டுக்கல் மாவட்டம் தி.மு.க. கோட்டையாக இருக்கிறது.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தல் களத்தில் 17 பேர் விருப்ப மனு வாங்கி நேர்காணலிலும் கலந்து கொண்டு வந்து விட்டனர். அவர்களில் ஒருவரைத் தான் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியும் பரிந்துரை செய்ததின் பேரில், திமுக தலைவர் ஸ்டாலின் அவரை வேட்பாளராக அறிவிப்பார் என்ற அடிப்படையில்தான் ஒட்டுமொத்த தொண்டர்களும் இருந்து வந்தனர். அதோடு மீண்டும் இத்தொகுதியில் சூரியன்தான் உதிக்குமே தவிர கூட்டணிக் கட்சிக்கு தொகுதி என்ற பேச்சே கிடையாது. அதுவும் கடந்த முறையை விட இந்த முறை இந்தியாவிலேயே அதிக ஓட்டு வாங்கி முதல் இடத்தை பிடித்து தலைவரிடமும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு அமைச்சர்களும் இப்பொழுதே தேர்தல் களத்தில் உடன்பிறப்புகளை உசுப்பி விட்டு இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்துதான் தொகுதிகளில் இப்பொழுதே உதயசூரியன் சின்னத்தையும் உடன்பிறப்புகள் வரைந்து வந்தனர்.

Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

இந்த நிலையில்,  திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்ததின் பேரில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 21 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தி.மு.க. நேரடியாக போட்டி போடுகிறது. அதோடு கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கியதின் பேரிலேயே இந்த முறையும் 18 தொகுதிகளையும், ஸ்டாலின் ஒதுக்கி கொடுத்திருக்கிறார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் சிட்டிங் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுரை மற்றும் கோவையில் இருந்து வருகிறார்கள்.

அதுபோலவே இந்த முறையும் இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் கோயம்புத்தூர் தொகுதியில் இந்தமுறை போட்டி போடாமல் திண்டுக்கல் தொகுதியில் சி.பி.எம்.போட்டியிடுகிறது. 

Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

முன்னதாக திமுக கோட்டையாக உள்ள திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி தலைமைக்கு கடிதம் மூலமும் வலியுறுத்தினர். அதோடு உடன்பிறப்புகள் பலர் இத்தொகுதியை கூட்டணி கட்சியான சி.பி.எம்.க்கு கொடுக்கக் கூடாது என்று இரத்தத்தால் கையெழுத்து போட்டு தலைவருக்கும், தலைமைக்கும் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே மாவட்டத்தின் தலைநகரான திண்டுக்கல் தொகுதி, கூட்டணி கட்சியான சி.பி.ஐ.க்கு ஒதுக்கியதன் பேரில் தான் எதிர்க்கட்சி இத்தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வருகிறதே தவிர அதன் மூலம் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை. அதேபோல் தான் இத்தொகுதியில் சி.பி.எம். போட்டி போட்டால் அது அதிமுகவுக்கு சாதகமாக அமைய கூட வாய்ப்பு இருக்கு. அதன் மூலம் திமுக கூட்டணி ஒரு தொகுதியை கூட இழக்க வாய்ப்பு இருக்கிறது.

இது சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் சிலரிடம் கேட்டபோது, 'எங்களுக்கு எப்போதும் போல் மதுரையும் கோவையும் ஒதுக்கி விடுங்கள் என்று சொல்லி தான் இரண்டு தொகுதிகளுக்கு ஒப்பந்தமும் போட்டு இருக்கிறோம். அப்படி இருக்கும் போது இப்ப திடீரென கோயமுத்தூரை விட்டுவிட்டு திண்டுக்கல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு கோயம்புத்தூர் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் அந்த தொகுதியில் போட்டியிடுவது எளிது. இதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆத்தூர், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் திண்டுக்கல், பழனி சட்டமன்ற தொகுதிகளில் தான் கட்சி வளர்ச்சி இருக்கிறது. அதுபோல் மற்ற தொகுதிகளில் சரிவர கிளைகள் இல்லை. கட்சி வளர்ச்சி என்பது பெரிதாக ஒன்றுமில்லை. இந்த ஆறு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் ஆளுங்கட்சியான தி.மு.க.விடமும் மற்ற மூன்று தொகுதிகள் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விடமும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஆளுங்கட்சியை சேர்ந்த தி.மு.க. இத்தொகுதியில் போட்டி போட்டால் தான் வெற்றி பெற முடியுமே தவிர, நாங்கள் போட்டியிட்டால் வெற்றி என்பது கேள்விக்குறியாக தான் இருக்கும். 

Dindigul Constituency Alliance Party?-Unhappy UPs

நாங்கள் போட்டியிட்டோம் என்று தெரிந்தாலே எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது மச்சான் கண்ணனை தேர்தலில் இறக்க தயாராகி வருகிறார். அப்படி அவர்  நிறுத்தவில்லை என்றால், முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தனது மகன் சதீஸை நிறுத்தவும் தயாராகி வருகிறார். இப்படி இரண்டு அமைச்சர்கள் குடும்பத்தில் இருந்து ஒருவரை தேர்தலில் நிறுத்த அதிமுகவும் தயாராகி வருகிறது.

இந்த விஷயம் கேள்விப்பட்ட உடனே, இரண்டு அமைச்சர்களுமே திமுக கோட்டையாக உள்ள தொகுதியை எப்படி தலைமை, கூட்டணி கட்சிக்கு ஒதுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் வேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக இத்தொகுதியில் போட்டி போட சொல்வதற்கு என்ன காரணம் என்ற கேள்வியையும் ஒருபுறம் எழுப்பி வருகின்றனர். இதனால் கூட்டணிக்குள் இருந்து வந்த உறவும் தொகுதி பிரச்சனையின் மூலம் பாதமாக அமையக்கூட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

இந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக‌, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் மாறி மாறி வெற்றி பெற்று இருக்கிறது. தவிர இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தொகுதியில் போட்டி போடவில்லை. ஆளுங்கட்சியான திமுகதான் இங்கு பலமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது திமுக வேட்பாளரை, தலைமை களத்தில் இறக்காமல் கூட்டணி கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கி இருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தி.மு.க. கூட்டணி கட்சியான சி.பி.எம். இங்கு போட்டியிடுவதால், தி.மு.க.வினர் தங்கள் கட்சி வேட்பாளருக்கு வேலை செய்வது போலவே வேலை செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. முன்னோடிகள் தெரிவிக்கின்றனர். 

சார்ந்த செய்திகள்