திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் வத்தலக்குண்டு நிலக்கோட்டை சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பயன்பாடு இல்லாமல் கிடந்த பாலத்தை மீண்டும் புதிதாக அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். தற்போது இந்தப் பாலம் அழகர் நகர் குடியிருப்பு பகுதி சாலைக்கு எதிரே அமைவதால் இதனால் தங்கள் பகுதிக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு பாலத்தில் இருந்து திடீரென வெளியேறும் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் அதிகளவில் வந்து விடும், இதனால் பாதிப்பு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே தேவையில்லாத இந்த பாலத்தை கட்ட வேண்டாம் அப்படி கட்டினால் எங்களுக்கு பாதிப்புதான் என்று அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்கனவே மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடரவே அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாலம் தோண்டும் குழிக்குள் இறங்கி பாலம் வேண்டாம் என கண்டன கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பாலத்தை அமைக்க நெடுஞ்சாலைத்துறை முன்வந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பொதுமக்கள் கூறினர்.
அப்போது அப்பகுதியை பார்வையிட வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.