நாகையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தில் பேசிய டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகரை போல திருவாரூர் மற்றும் திருபரங்குன்றம் இடைதேர்தலிலும் வெற்றிபெறுவோம் என சூளுரைத்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் மக்கள் சந்திப்பு பயணத்தை இரண்டாவது நாளாக திருக்குவளையில் துவங்கினார். அதனை தொடர்ந்து நாகை வந்த அவருக்கு அந்த அக்கட்சியினரால், மேளதாளத்துடன், மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களின் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், "நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் விரைவில் வரப்போகிறது. இந்த நாகை தொகுதி வேட்பாளர் யார் என்று உங்களுக்கு தெரியும் மாவட்ட செயலாளர் சந்திரமோகன் தான். அவரை தோற்கடிக்க எந்த மணியும் வந்தாலும் முடியாது (பணத்தையும், ஒ.எஸ்.மணியனையும் குறிப்பிட்டே மணி என்றார்) அவரை வரும் தேர்தலில் மகத்தான வெற்றிபெற செய்யவேண்டும். ஆர்கே.நகர் தேர்தலை போலவே நடந்துவரும் அடிமை பழனிச்சாமி துரோக ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் வரப்போகும் திருவாரூர் மற்றும் திருபரங்குன்றம் இடைதேர்தலிலும் வெற்றிபெறுவோம் என்றார்.
நாகை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் ஏரியாவான காடம்பாடியில் 58 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத கொடிமரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை ஏற்றினார். அதனை தொடர்ந்து புகழ்பெற்ற நாகூர் தர்கா பகுதியிக்கு சென்றவர் குல்லா அணிந்துகொண்டு அங்கு குழுமியிருந்த மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களில் சிலர், பக்கத்தில் இருக்கும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் எங்களின் வாழ்வாதாரமே சிதையுது, அதப்பற்றி பேசுங்க இல்லன்னா இங்கிருந்து கிளம்புங்க என்று கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பேசவந்ததை குறைத்துப்பேசிவிட்டு சென்றார்.
ஏற்கனவே நாகை அவுரித்திடலில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தை அதிமுக அமைச்சர் ஒ,எஸ்,மணியனின் உத்தரவின் பெயரில் காவல்துறையினரோடு நகராட்சி ஊழியர்கள் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த கோபத்தில் இருந்த தினகரனுக்கு நாகூரிலும் தனது ஆட்களை கூட்டத்தில் புகுத்தி இடையூறு செய்யவைத்திருக்கிறாரே என்கிற எரிச்சலில் ஒ.எஸ்.மணியன் குறித்து அனைத்துவிதமான தவறுகள், மோசடிகள் குறித்து தயாரிக்குமாறு தனது ஆதரவாளர்களிடம் இன்ஜக்சன் கொடுத்துவிட்டே சென்றிருக்கிறார். விரைவில் ஒ.எஸ்.மணியன் மற்றும் அவரது பினாமிகளை கண்டித்து ஆர்பாட்டம் நடக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.