விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. அதில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பேசுவது போல் காட்சி இடம்பெற்றது. மத வெறுப்பை தூண்டும் வகையில் படம் இருப்பதாக பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. இதில் மதமாற்றம் எவ்வாறு செய்கிறார்கள் என விரிவான சில காட்சிகள் காட்டப்பட்டிருந்தன. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்திற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என 2 தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். 2 தரப்பு மனுவும் தனித்தனியே விசாரணைக்கு வந்தபோது அம்மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தி மனுவை நிராகரித்தது. பின்பு இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே இந்த படத்தை வெளியிடக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், "ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்? முன்பே வந்திருந்தால் யாரையாவது படத்தைப் பார்த்து முடிவு செய்யச் சொல்லியிருக்கலாம். நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை. பிரச்சனைகள் வரும் என்று எப்படி யூகிக்க முடியும்? மேலும், கேரளா உயர்நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தைக் கைப்பற்றி உள்ளது." எனச் சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரரிடம் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை(5.5.2023) கேரள ஸ்டோரி வெளியாகவுள்ளது. இதனையொட்டி தி கேரளா ஸ்டோரி வெளியாகவுள்ள திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க அனைத்து காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.