Skip to main content

தடையை மீறி கிரிவலம் வந்த பக்தர்கள்... போலீஸ் தடுத்ததால் சாலைமறியல்...!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Devotees who came to girivalam in ban time..


திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை கிரிவலம் என்பது தென்னிந்தியாவில் பிரபலமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் கிரிவலம் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டு, திருவிழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் திருவண்ணாமலையில் கிரிவலம் வர மட்டும் இன்னும் தடை விதிக்கப்பட்டுவருகிறது.


வரும் ஜனவரி 28ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி 29ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்திருந்தார். அதனை மீறி ஆயிரக்கணக்கான வெளிமாவட்ட, வெளிமாநில மக்கள் கிரிவலம் செல்வதற்காக வருகை தந்திருந்தனர். ஜனவரி 28ஆம் தேதி காலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றதை காவல்துறை கண்டுக்கொள்ளவில்லை. இரவு 8 மணிக்கு மேல் அதிகமான அளவில் பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினார்கள். இதனால் அதிர்ச்சியான காவல்துறை, இரவு 9 மணியளவில் அரசு கலைக்கல்லூரி அருகே பக்தர்களைத் தடுத்து நிறுத்தியது.


தடை உத்தரவு அமலில் உள்ளது, கிரிவலம் செல்லக்கூடாது எனக் காவல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். "சினிமா தியேட்டர் திறந்துட்டாங்க, அரசியல் கட்சிங்க கூட்டம் நடத்தறாங்க. அவுங்களாள பரவாத கரோனா, நாங்க கிரிவலம் வர்றதால் மட்டும் பரவிடுமா?" எனக் கேள்வி எழுப்பினர். இருந்தும் காவல்துறை அசைந்து கொடுக்கவில்லை, இந்த வாக்குவாதம் 2 மணி நேரத்துக்கு மேல் நடந்தது. காவல்துறையினர் உறுதியாக இருந்தனர். கோபமான பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இரவு 11 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
 

 

 

சார்ந்த செய்திகள்