ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இங்கு நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத்தில், பெரும் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடிப்பார்கள். பத்து நாள் திருவிழாவில், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருவார்கள் பக்தர்கள். கரோனா காரணமாக, இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமலே, 24-ஆம் தேதி தங்கத்தேர் இழுப்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. இத்தேரோட்டத்தை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு, இவ்விழாவில் கோவில் தக்கார் ரவிச்சந்திரனும், செயல் அலுவலர் இளங்கோவனும், அர்ச்சகர்களும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், கூட்டம் கூடிவிட்டது. சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்து, சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதித்தார் செயல் அலுவலர் இளங்கோவன். பக்தி பரவசத்தில், கரோனா – சமூக விலகலை அறவே மறந்து, பக்தர்களும் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றனர். ‘நாங்களும் ஆண்டாள் பக்தர்கள்தான்..’ என்று சில செய்தியாளர்கள் கூறியும், அனுமதிக்க மறுத்துவிட்டது, கோவில் நிர்வாகம்.