திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைப்பது காவிரி பாலம். சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளாக திருச்சி மாநகரின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படும் இந்தப் பாலம் தற்போது சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இந்தப் பாலத்தில் ஏற்பட்ட சில பழுதுகளை ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து தொடர்ந்து மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அதில் குறிப்பாக பாலத்தின் நடுவே உள்ள இரும்பினால் செய்யப்பட்டுள்ள இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டு வாகனங்களின் போக்குவரத்தால் அதிர்வு அதிகமாகி அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இந்தப் பாலத்தை ஆய்வு செய்ததோடு இதற்கு அருகிலேயே ஒரு புதிய பாலம் கட்டப்படும் என்றும் அதற்காக நூற்று ஐம்பது கோடி ரூபாய் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மாநில நெடுஞ்சாலை துறை மூலம் துவங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
தற்காலிகமாக இந்தப் பாலத்தை பயன்படுத்துவதற்காகவும் விபத்துக்களைத் தடுப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 6 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு பாலங்களின் நடுவே உள்ள இணைப்புகளில் அதிர்வுகளால் ஏற்படும் பிளவுகளை நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் தூண்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களைச் சரிசெய்து மண்ணரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். இதைச் சீரமைத்தால் சற்று கூடுதலாக 20 ஆண்டுகள் இப்பாலத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.