தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "10 ஆண்டுகாலம் சிறந்த முதலமைச்சராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பின்னர் 16 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தொலைநோக்குத் திட்டங்களை கொடுத்தார்.
அவருக்கு பின்னர் 4 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சிறப்பாகப் பணியாற்றினார் - ஆக மொத்த 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய வரலாறு அ.தி.மு.க.வுக்கு தான் உண்டு. இந்த இயக்கத்திற்கு தி.மு.க.வினர் எண்ணற்ற பிரச்சனைகளைக் கொடுத்தாலும், அதனை பொறுமையாக ஜெயலலிதா எதிர் கொண்டார்.
மூன்றாவது முறையும் அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது, ஒரு சின்ன சறுக்கலால் அது நிறைவேறாமல் போனது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் இந்தியாவிலேயே தமிழகத்தில் படித்த பட்டதாரிகள் 52% ஆக அதிகரிக்க வழிவகை செய்தார்.
2007- ல் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் சென்று 2010- ல் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு அரசு ஆணை பெற்று தந்தவர் ஜெயலலிதா. பேரிடர் காலங்களில் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கியது அ.தி.மு.க. ஆட்சி தான். நம் ஆட்சியில் பாரத பிரதமரே கூறினார். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
505 பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க.வினர் வழங்கி வருகின்றனர். இவர்களது ஆட்சி காட்சியாக தான் உள்ளது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே முதல் கை எழுத்து நீட் ரத்து என்றார் மு.க.ஸ்டாலின். ஆனால் அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை, அவரால் செய்யவும் முடியாது. நேரடியாக நகர்புற தேர்தலை நடத்த இவர்களுக்கு அச்சம். ஏனென்றால் மக்கள் வெளியே எங்கு சென்றாலும் கேள்விக் கேட்க ஆரம்பித்து விட்டனர்" எனத் தெரிவித்தார்.