தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்திருந்தார்.
உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர்கள். திமுகவினர் திரளாகக் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.