டெங்கு காய்ச்சலை தடுக்காத தமிழக அரசை கண்டித்து - தேமுதிக விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அரசு இருக்கிறதா இல்லையா, செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 400 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள். இதை மக்களிடத்தில் அரசு மறைக்கிறது. ஆரம்ப சுகாதாரமையங்களிலும், அரசு கல்லூரி மருத்துவமனைகளிலும், சுமார் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி ஈரமுள்ள இதயத்தை ஈட்டி கொண்டு குத்துவதுபோல் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. இந்த அரசு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து உடனடியாக உரிய சிகிச்சை அளித்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களை, டெங்கு காய்ச்சல் என்று சொல்லாமல், மர்ம காய்ச்சல் என்று தவறான தகவலை மக்களிடத்தில் பரப்பிவருகிறார். மருத்துவர்களோ டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுத்தான் இறந்துள்ளார்கள் என்று தெரிவிக்கிறார்கள். இதை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பி.எஸ். மக்களை பற்றி கவலைப்படாமல் மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அதிமுக அறக்கட்டளையில் இருந்து செலவு செய்வதை விட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தை வினாக்கி ஆடம்பர விழாக்களாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கு செய்கின்ற செலவை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவாக செய்திருக்கலாம். டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்படிருக்கும் இந்த நிலையில் அதை முனைப்போடு கட்டுப்படுத்த வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிலவேம்பு கசாயத்தை கொடுப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். தங்கள் பணத்தை கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார்கள் என்று மக்கள் வேதனைபடுகிரார்கள்.
கிராமங்கள் தோறும் மருத்துவமுகாம்கள் அமைத்து மக்களை பரிசோதிப்பது, டெங்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் குப்பைகளை அகற்றி, தேங்கி நிற்கும் கால்வாய்களை
சுத்தப்படுத்தி, கொசு மருந்துகளை எல்லாப்பகுதிகளிலும் அடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உரிய மருத்துவசதிகளையும் செய்யவேண்டிய ஒரு அரசு, பதவியை தக்கவைத்துக்கொள்வதிலும், ஆட்சி கவிழாமல் எப்படி பாதுகாப்பது என்ற சிந்தனையிலையே காலம் கடத்தி வருகிறார்கள். இதை மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ஒ.பி.எஸ். அவர்களோ ஓவ்வொரு மேடைகளிலும், நடந்து கொண்டிருப்பது அம்மாவின் வழியில் நடக்கின்ற ஆட்சி என்று கூறிவருகிறார். ஆனால் மறைந்த ஜெயலலிதா சுதந்திர போராட்ட தியாகி அல்ல, மூன்று முறை முதலமைச்சராக இருந்து ஆட்சியில் எல்லா வகையிலும் கொள்ளையடித்து, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனைபெற்று வந்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தவரும் ஜெயலலிதா தான். ஆகையால் ஈ.பி.எஸ். மற்றும் ஒ.பி.எஸ். அவர்களாகவே நடப்பது ஊழல் ஆட்சி என்று ஒத்துக்கொள்கிறார்கள். மக்கள் மீது கவனம் செலுத்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களும், தங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய உதவிகளை செய்து, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.