அரியலூரில் வட்டாட்சியர் முன்னிலையில் செட்டிநாடு ஆலை அத்துமீறி நடத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வலியுறுத்தும் போராட்டக்குழுவினர், ஆலை நிர்வாக அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த சில மாதங்களாகவே சுற்றுச்சூழல் விதிமீறல் நடைபெறுவதாக கூறி கீழப்பழுவூரில் இயங்கும் செட்டிநாடு ஆலையை கண்டித்து சுவரொட்டிகள் அடித்து போராட்டம், கையெழுத்து இயக்கம், தமிழக முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பும் இயக்கம், காத்திருப்பு போராட்டம் என தொடர்ந்து போராட்டம் நடந்ததை ஒட்டி கடந்த 28/8/2020 அன்று போராட்டக்குழுவினர் உடன் அரியலூர் வட்டாட்சியர் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டக்குழுவினர், விதிமீறலுடன் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை எடுப்பதாக குற்றஞ்சாட்டினர். மேலும் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது கீழப்பழுவூரில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஆய்வு செய்து விதிமீறல் கண்டறியப்பட்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கீழப்பழுவூரில் இயங்கும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் ஓடை வாரியை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். மேலும் 3 இடங்களில் காற்று மாசு அளவீட்டு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விபத்தை ஏற்படுத்துகின்ற சுண்ணாம்புக்கல் லாரிகளால் அன்றாடம் பல உயிர் போகிறது எனவும் சுண்ணாம்புக்கல் லாரிகள் இயக்கத்தினை அளவுக்கதிகமாக லாரிகளில் ஏற்றிச் செல்லும் சுண்ணாம்புக்கல் சாலையில் கொட்டிக் கொண்டே செல்வதால் விபத்துக்கள் நடப்பதாகவும் உயிர்பலி நடக்காத வண்ணம் சம்மந்தபட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து விபத்தில்லா உயிர்பலி இல்லாத அரியலூர் மாவட்டத்தை உருவாக்கிட நடவடிக்கை வேண்டும் எனவும் போராட்டக்குழுவினர் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறி செயல்படுவதாக ஆய்வில் தெரிய வந்தால் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. வெட்டி முடிக்கப்பட்ட காலாவதியான சுரங்கங்களில் மியாவாக்கி காடுகளை உருவாக்கி சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. வட்டாட்சியர் சந்திரசேகரன் முன்னிலையில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கனிம வளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிமெண்ட் ஆலை நிர்வாக அதிகாரிகள் போராட்டக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமரன் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், பழுவேட்டரையர் பேரவை தலைவர் கார்த்திக் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.