நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கின்றன.
நாகை மாவட்டம், பாலையூர், வடகுடி, தெத்தி, செல்லூர், திருமருகல், திருக்குவளை, கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் அப்படி விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாகிவந்தனர். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாகவே மழை கொட்டித்தீர்த்துவருகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக கொட்டித்தீர்த்துவரும் கனமழையினால் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகும் நிலைக்குப் போய்விட்டன. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் கடல்போல் காட்சியளிக்கின்றன. தாளடி நடவுக்குத் தயாராக இருந்த நாற்றுகளும் மழையில் நாசமாகி மிதக்கின்றன.
"விவசாயத்திற்காக கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுவிட்டது. பாதிப்படைந்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என கலங்குகிறார்கள் விவசாயிகள்.