விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய கடலோரம் மற்றும் டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திடீர் போரட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை கூடிய வெலிங்டன் நீர்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கத்தினர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதித்து, தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பதாகைகள் ஏந்தி முழுக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய சங்கத்தினர் முன்னறிவிப்பின்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனிலும், ஆட்டோவிலும் ஏற்றி சென்றனர்.