இந்திய கலாச்சார, பாரம்பரியத்தின் மீது ஆர்வத்தை ஊக்கப்படுத்த டெல்லி ஐஐடியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கிரண் சேட் (73) அவர்கள், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளிடையே இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2022 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஸ்ரீநகரிலிருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர் தற்போது 14 மாநிலங்களைக் கடந்து 15வது மாநிலமாக தமிழ்நாட்டின் திருச்சிக்கு நேற்று வருகை தந்தார். நேற்று திருச்சியில் உள்ள கல்லூரிகளில் மாணவ மாணவிகளை சந்தித்து உரையாற்றிய அவர் இன்று காலை திருச்சியிலிருந்து மதுரை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த விழிப்புணர்வு பயணத்தில் அவர், குழந்தைகளிடையே இளம் பருவத்திலிருந்து இசை, நடனம் மற்றும் நாட்டுப்புற கலைகள், உரைகள், தியானம், யோகா மற்றும் கைவினை கற்பித்தல், பண்டைய கட்டடக்கலை, நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை பள்ளிகளும், கல்லூரிகளும் தனியாக நேரம் ஒதுக்கி கற்றுத்தர முயல வேண்டும். மேலும் பெற்றோர்களும் இதை ஊக்கப்படுத்தி அவர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.