இந்திய தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டமும் அது வன்முறையாகவும் மாறியிருக்கிறது. இந்த நிலையில் போராட்டக்காரர்களை எதிர்த்து ஒரு கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இச்சம்பவம் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஊடகவியலாளர்கள் இந்த வன்முறை காட்சிகளை படம்பிடித்து மக்கள் மத்தியில் செய்தியாக வெளியிட்டு வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும் என்று ஒரு கும்பல் போராட்டக்களத்தில் ஊடுருவி பத்திரிகையாளர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. மேலும் பத்திரிகையாளர்களிடம் அவமரியாதையாகவும் நடந்துள்ளார்கள். இந்தத் தாக்குதலில் காயமடைந்த சில பத்திரிகையாளர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சதித் தாக்குதலை கண்டித்து இந்தியா முழுக்க பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர் நலச்சங்கம் இன்று காலை ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு என்ற பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் ஜீவாதங்கவேல் முன்னிலை வகித்து ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களை தாக்கிய கும்பல் மீது மத்திய அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.