வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரெட்டிமாங்குப்பத்தை சேர்ந்த மணிமாறன் மகள் 11 வயது சங்கவி. ஒரு மாதத்துக்கு முன்பு சங்கவி தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தபோது அதே ஊரை சேர்ந்த 50 வயதான கென்னடி மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்தபோது, விளையாடிக்கொண்டு இருந்த சங்கவியின் மீது வண்டியை ஏற்றியதில் அவர் சம்பவயிடத்திலேயே இறந்தார்.
இந்த புகாரின் கீழ் கென்னடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆகஸ்ட் 4ந்தேதி ஜாமினில் வெளியே வந்தார். வந்தவர் அருகில் உள்ள கிராமத்தில் தனது நண்பரை பார்த்துவிட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்ததும் மயக்கமடித்து கீழே விழுந்துள்ளார். பதறிய அவரது குடும்பத்தார் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் இறந்துவிட்டார் எனக்கூறினர்.
எப்படி இறந்தார் என அறிய அவரது உடல் உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அது முடிந்து உடல் ஆகஸ்ட் 5ந்தேதி மாலை ரெட்டிமாங்குப்பத்துக்கு கொண்டு வந்தனர். இது சாதாரண மரணமல்ல, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என இறந்த கென்னடியின் உறவினர்கள் கென்னடியின் மனைவி வரலட்சுமி தலைமையில் சாலை மறியல் செய்தனர். போலிஸார் தீவிரமாக விசாரித்து கொலையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தனர். இதனால் சாலைமறியல் கைவிடப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 6ந்தேதி மதியம் 12 மணியளவில் மாட்டுவண்டியில் சிக்கி இறந்த பவித்ராவின் தாத்தா மற்றும் உறவினர்கள் சிலரை, குடியாத்தம் போலிஸார் வந்து விசாரணைக்கு அழைத்துள்ளனர். எங்களை எதுக்காக அழைக்கிறீர்கள், கென்னடி இறப்புக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக உறவினர்களும் போலிஸாரிடம் வாக்குவாதம் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் போலிஸார் திரும்பி சென்றனர்.