கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் 100 லிட்டர் மோர் விற்பனையே 12 மணிக்கே முடிந்துவிடும் அளவுக்கு மக்கள் தாகத்தை தணிக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். இந்த வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான, மிதமான காற்றுடன் மழை பெய்தது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகர சுற்றுவட்டார பகுதிகளில் ஏப்ரல் 30ந்தேதி இரவு, திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் காற்றில் முறிந்து விழுந்துன. ஆம்பூர் ஆயிஷாபி நகர், பிலால் நகர், புதுமனை ஆகிய பகுதிகளில் 8க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை, அங்குள்ள ஒரு பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் மின் கம்பிங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடை செய்யப்பட்டது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையின் போது ரயில் நிலையம் அருகே உள்ள மரக்கிளைகள் உடைந்து சாலை அருகே விழுந்தது. தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருந்த உயர் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்லாமல் நின்றன.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நின்றது. தகவலறிந்து வந்த மின்சார துறையினர் மற்றும் ஆம்பூர் போலீசார், மின் இணைப்பு துண்டித்து பொதுமக்கள் உதவியுடன் மின்கம்பிகளை அகற்றினர். பின்னர் போக்குவரத்து தொடங்கியது. அதேப்போல், வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் ஜானகி என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கொட்டகையில் 20 ஆடுகள் அடைத்து வைத்திருந்தார். மழையினால் ஆட்டு ஆட்டுக்கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த 8 ஆடுகள் பலியானது.
இதுப்பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், வட்டாச்சியர் முருகன் சேதமடைந்த பகுதிகைள பார்வையிட்டனர். ஆட்டு கொட்டகை விழுந்து பலியான ஆடுகளின் உரிமையாளர் ஜானகியை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்கள்.
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாததால் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி தேர்தலின்போது வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் நிலோபர் ஆறுதல் கூற வந்துள்ளார் என அங்கிருந்த மக்கள் முணுமுணுத்தனர். இதற்கு முன்பு இதுப்போல் மழைக்காலங்களில் பெரும் துன்பத்தை மக்கள் அனுபவித்தபோது வீட்டை விட்டு வெளியே வராதவர் தான் இந்த அமைச்சர் என்கிறார்கள் இன்னும் சிலர்.