கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தவர் அசோகன். இவர், வியாழக்கிழமையுடன் (ஜூன் 30) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில், திடீரென்று அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தோம். கடந்த 2020- ஆம் ஆண்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் அசோகன் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இந்தப் புகார் மீதான விசாரணை இன்னும் முடிவடையாததால், அவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மீது ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர், பணி ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.