பேரணியை நடத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று தற்பொழுது விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அக்.2 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ஆம் தேதி பேரணியை நடத்திக் கொள்ளலாம் அதற்கான அனுமதியை காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்.31 ஆம் தேதி தள்ளிவைத்தார். அக்.31 ஆம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்காவிட்டால் அடுத்த நாளே நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கை தொடரும் என எச்சரித்தார்.