ரஜினிகாந்தின் தர்பார் படம் சிங்கப்பூர், மலேசியா உட்பட உலகம் முழுவதும் ஏழாயிரம் திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தர்பார் படம் ரிலீஸ்ஆகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் உமா, ராஜேந்திரா மற்றும் கார்னிவல் உட்பட ஏழு திரையரங்குகளில் தர்பார் படம் இன்று ரிலீஸ் ஆகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் முதல்நாள் இரவே தியேட்டர்களுக்கு சென்ற ரசிகர்கள் ரசிகர்களின் டோக்கன்களுக்காக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது தியேட்டர் உரிமையார்ளகளோ இன்னும் தர்பார் படம் எடுப்பதில் காலதாமதம் ஆகி வருகிறது. அதனால் திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆவது சந்தேகம் தான் என்று கூறினார்கள். இதனால் டென்சன் அடைந்த ரசிகர்கள் முதல்நாள் இரவு முதல் அதிகாலை வரை தியேட்டர்கள் முன் பெருந்திரளாக திரண்ட ரசிகர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். அதையும் பொருட்படுத்தாத ரசிகர்கள் தலைவரின் தர்பார் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சில ரசிகர்கள் தங்கள் தலைவர் படம் ரிலீஸ் ஆகாத ஆத்திரத்தில் தியேட்டர் மீது கற்களை வீசியும், தியேட்டரில் ஏற்கனவே வேறு படங்களான ஹீரோ, தம்பி, திரைப்படங்களின் பேனர்களை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் டென்சன் அடைந்த போலீசார் அந்த ரசிகர்களை விரட்டி அடித்தனர்.
இது சம்மந்தமாக தியேட்டர் உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ஏற்கனவே ரஜினி படங்கள் திரையிட்டதின் மூலம் எங்களுக்கு நஷ்டங்களும் ஏற்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து தான் இந்த தர்பார் படத்தை 80 லட்சத்திற்கு விநியோகஸ்தர்களிடம் கேட்டோம். ஆனால் மதுரையைச் சேர்ந்த சி.எல்.என். விநியோகஸ்தர்கள் ஒரு கோடியே 30லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உங்களுக்கு படம் ரிலீஸ் பண்ணுவோம் என்று கூறிவிட்டனர். எங்களுக்கு அந்த அளவுக்கு பணம் கொடுத்து படத்தை எடுத்தால் படம் ஓடுமா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து வந்ததால் தொடர்ந்து குறைத்து கொடுங்கள் என்று வலியுறுத்தினோம். அப்படியிருந்தும் விநியோகஸ்தர் குறைத்துக் கொடுக்க முன்வரவில்லை. அதனால் தான் தர்பார் படம் ரிலீஸ் ஆவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அது தெரியாமல் ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து கூச்சல், குழப்பம் செய்து பிரச்சனை செய்து வருகிறார்கள். இந்த விசயம் போலீசாருக்கு தெரியவும் தான் இந்த ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இருந்தாலும் எங்களுக்கும் தலைவர் ரஜினி படம் ஓட வேண்டும் என்ற ஆசை தான் இருக்கு. அதற்குண்டான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றனர்.
இது சம்மந்தமாக திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்ற நகர பொறுப்பாளரான ஜோசப்பிடம் கேட்டபோது, தலைவரின் 162வது படம் தான் தர்பார். இந்த தர்பார் படம் பார்ப்பதற்காக இரவிலிருந்து அதிகாலை வரை தியேட்டர்கள் முன்பு பெருந்திரளாக ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் திரையங்கரத்தினருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் என்னைப் போல் உள்ள ரசிகர்கள் எல்லாம் மனம் நொந்து போய்விட்டோம்.
திண்டுக்கல்லில் உள்ள இந்த ஏழு திரையரங்குகள் மட்டும் தான் தலைவர் தர்பாரின் படம் ரிலீஸ் ஆகவில்லையே தவிர திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, சின்னாளபட்டி ஆகிய ஊர்களில் தலைவரின் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இப்படி மாவட்டத்தின் தலைநகரத்திலேயே தலைவர் படம் ரிலீஸ் ஆகாதது எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் மாவட்டத்தில் இருக்கக்கூடிய நான்கு சிறு நகரங்களில் கூட தலைவரின் படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கி ரிலீஸ் பண்ணி இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது மாவட்டத்தின்தலைநகரான திண்டுக்கல்லில் படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தலைவரின் தர்பார் படம் பாட்ஷா படம் போல் வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் தலைவர் பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுவதை எடுத்துக் கூறி அதை நடவடிக்கை எடுக்க கூறி போலீசாரிடம் வலியுறுத்துகிறார். தற்போது இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் மக்களிடம் ஒரு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தர்பார் படத்தில் தலைவர் நடித்து இருக்கிறார். அதன்மூலம் தலைவருக்கு ரசிகர்களின் ஆதரவோடு பொதுமக்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும் என்று கூறினார்.