நடிகர் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட ரூ.4.9 கோடி வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவாதத் தொகை செலுத்தாத பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்திடமிருந்து, மலேசிய விநியோக உரிமையை 20 கோடி ரூபாய்க்கு பெற்றதாகத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், 2.o படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைக்கா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்தத் தொகையை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக தங்களுக்கு லைக்கா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்தத் தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் கடந்த 3-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தபோது, லைக்கா நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மனுதாரர் கூறுவது போல், எந்தக் கடனும் லைக்கா நிறுவனம் தரப்பில் தர வேண்டியது இல்லை. மனுதாரர் உள்நோக்கத்துடன் இந்த வழக்கைத் தொடர்த்துள்ளார். மனுதாரர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது. மேலும், அற்பகாரணங்களுக்காக இந்த வழக்கை மனுதரார் தொடர்ந்துள்ளார். மனுதரார்தான் எங்கள் நிறுவனத்திற்கு ரூ.1 கோடியே 45 லட்சம் அளிக்க வேண்டும். எனவே தர்பார் படத்திற்கு தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்குப் பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால், அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. அவர்கள் கூறும் அனைத்து கணக்குகளும் தவறு எனத் தெரிவித்தார். லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்கு, காலா படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமையை அளித்ததாகவும், அதற்கான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு, வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தர்பார் திரைப்படத்தை மலேசியா நாட்டில் வெளியிட தடை விதிப்பதாகவும், மலேசியாவில் படத்தை வெளியிட வேண்டும் என்றால் 4.9 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யும் வரை படத்தை மலேசியாவில் வெளியிடக் கூடாது. பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிடலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் மூலமாக, தமிழகம் உள்பட இந்தியாவில் வெளியிட எந்த விதமான தடையும் இல்லை. மலேசியாவைத் தவிர பிற நாடுகளிலும் வெளியிட தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.