பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
மாங்காடு அருகே பேக்கரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின. கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாங்காடு பாலாஜி நகரை சேர்ந்தவர் கருப்பையா (50). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாங்காடு - குன்றத்தூர் பிரதான சாலையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இங்கு, 8 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு சென்றனர். நேற்று காலை 8.30 மணிக்கு கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது, கடையின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.
இதையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவியதுடன், கடையின் உள்ளே வைத்திருந்த காஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், கடை ஊழியர்கள் மற்றும் வேடிக்கை பார்த்த பொதுமக்கள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். தகவலின் பேரில், பூந்தமல்லி மற்றும் மதுரவாயலில் இருந்து 2 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பேக்கரி கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. சிலிண்டர் வெடித்து சிதறியதால் பேக்கரி கடை செயல்பட்ட கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பேக்கரி கடையில் உள்ள மைக்ரோ ஓவனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.