சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மழைநீர் தேங்கும் இடங்கள் குறைந்ததால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. பொதுமக்களை தங்க வைப்பதற்காக சென்னையில் 77 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அம்மா உணவகங்கள் மூலம் உணவு தயாரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நான்கு பொது சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளது.
சென்னையில் தினசரி வழங்கும் நீரின் அளவை உயர்த்தி, 750-ல் இருந்து 800 எம்.எல்.டி.யாக உயர்த்தி வழங்கப்படும். புயல் பாதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 90 மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் உடனடியாக அகற்றப்பட்டன. மழை நீரை அகற்றவும், கீழே விழும் மரங்களை அப்புறப்படுத்தவும் சென்னையில் மண்டல வாரியாக குழுக்கள் தயாராக உள்ளன. மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக படகுகள் தயார் நிலையில் உள்ளன; மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.