பீளமேடு பகுதியில் புதிதாக அமையவுள்ள கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகக் கட்டிடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் மற்றும் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் பேசுகையில், “தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ.க.வுக்கு சொந்த அலுவலகக் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாணியம்பாடி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டிடங்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்கப்பட உள்ளன.
தற்போது, கோவையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கட்டிடம், 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவால் திறந்து வைக்கப்படவுள்ளது. வேல் யாத்திரை நிகழ்வுகளில் எப்போதும் கைது செய்யப்படுவது போலவே நேற்றும் என்னைக் கைது செய்து விடுவித்தனர். இன்று, வேல் யாத்திரை பழனியில் தொடங்குகிறது. வரும் 5 ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவடைகிறது” என்றார்.
பின்னர், மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பேசுகையில், “மத்திய அரசின் வேளாண் பாதுகாப்புச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும்.
இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபத்திற்காகப் போராடி வருகின்றனர். கேரளாவில் இயற்றப்பட்டுள்ள ‘சைபர் லா’ கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கொடூரச் சட்டம் ஆகும். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு ஏதுமில்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.