பிச்சாரவம் சுற்றுலா மையத்துக்கு செல்ல கூடுதல் சுங்க கட்டணம் வசூல்
சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலாமையத்துக்கு செல்லும் வழியில் கிள்ளையில் உள்ள சுங்க சாவடியில் கார், வேன்,இருசக்கர வாகனம், பேருந்து ஆகியவைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிச்சாவரம் வரும் சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்ட பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலாமையத்தில் கழிமுக ஆற்றில் படகு சவாரி செய்தவாறு சுரப்புன்னை காடுகளின் அழகை கண்டு களித்த வண்ணம், காடுகளில் உள்ள மைனா, கிளி உள்ளிட்ட அறிய வகை பறவையினங்களின் சத்தத்தை ரசித்தவாறு, காடுகளில் உள்ள நீர் நாய், நரி போன்ற விலங்கு பார்க்க முடியும். இயற்கை எழில் கொஞ்சும் இடமாக உள்ளது இந்த சுரபுன்னை காடுகள். படகில் கழிமுக ஆற்றில் இருந்து கடற்கரை வரை சென்று வரவும் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா மையத்துக்கு சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், வேலூர், சேலம்,புதுக்கோட்டை, மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கார், வேன், பேருந்து உள்ளிட்டவைகளில் வந்து செல்கின்றனர்.
கிள்ளை பேரூராட்சியின் சார்பில் கார், வேன், இருசக்கர வாகனம், பேருந்து ஆகியவற்றுக்கு சுங்கவரி வசூலிக்க தனியாரிடம் டெண்டர் விடப்பட்டுள்ளது. சுங்கசாவடி கட்டணமாக பேருந்துக்கு ரூ 50ம், கார், வேனுக்கு ரூ 20ம், பைக்குக்கு ரூ10ம் வாங்கவேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் டெண்டரில் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் பேருந்துக்கு ரூ 200ம், வேனுக்கு ரூ 100ம், காருக்கு ரூ50ம், பைக்குக்கு ரூ 10 கட்டணமாக வாங்குகிறார்கள். இதற்கு ஏன் அதிக கட்டணம் என்று கேள்வி எழுப்பினால் குண்டர்களை கொண்டு மிரட்டும் தோரனையில் பேசுகிறார்கள்.
பயணிகளும் ஏன் வெளியூரில் வம்பு என்று முகம் சுளித்தவாறு கேட்கும் தொகையை தலையை சுற்றி கொடுப்பது போல் கொடுத்து செல்கிறார்கள். ஆனால் அவர்கள் வசூலிக்கும் தொகைக்கான ரசீது கொடுப்பதில்லை. சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்து செல்கின்றனர். இது குறித்து பலர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள சுங்க கட்டணத்தை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனம் கூறுகையில் சுங்க சாவடியில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை தவிர கூடுதலாக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-காளிதாஸ்