கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி (45) சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணி செய்து வந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு சுமார் 12 மணி வரை செல்போனில் அவர் பேசி கொண்டு இருந்ததாக அவர் வீட்டின் அருகில் இருப்போர் தெரிவித்தனர். வீட்டின் முன்பகுதியில் உள்ள அறையில் கதவு இல்லாமல் வெள்ளைத் திரையை இட்டு படுத்திருந்தவர் காலை 8 மணி கடந்தும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த பொழுது நெற்றியில் ரத்தம் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
பின்பு ஊர் மக்கள் புவனகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சீதாலட்சுமி பிரேதத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்ததில் வீட்டுக்கு பின்புறம் அம்மிக்கல் ரத்தமாக இருந்ததை மோப்ப நாய் கண்டுபிடித்தது. போலீசார் விசாரணையில் அடித்து கொலை செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்று புவனகிரி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இறந்த சீதாலட்சுமி கணவர் இறந்து 10 வருடம் ஆகிறது. இரண்டு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஊர் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.