கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள எருமனுார் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(24)க்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஷோபனா(21)வுக்கும் கடந்த இரண்டரை வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒன்றரை வயதில் விஷோத் என்ற மகன் உள்ளார். திருமணத்தின்போது ஷோபனாவின் பெற்றோர் 50 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் சீர் வரிசையாக வழங்கி திருமணம் முடித்துள்ளனர்.
பி.இ. படித்த விஜயகுமார் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், விஜயகுமாருக்கும், அவருடன் வேலை செய்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு ஷோபனாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. இதுகுறித்து அவர் விஜயகுமாரிடம் கேட்டபோது விஜயகுமார் அவரது தாய், தந்தையுடன் சேர்ந்து மேலும் வரதட்சணையாக பணம் நகை கேட்டு ஷோபனாவை அடிக்கடி துன்புறுத்தி வந்ததுடன் மூவரும் சேர்ந்து தாக்கியதில் மனமுடைந்த சோபனா நேற்று முன்தினம் (15.07.2020) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன் சாவுக்கு காரணம் கணவர், மாமியார், மாமனார் ஆகியோர்தான் காரணமென்றும், அவர்களுக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் வீடியோ பேசியிருந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரி ஜெயக்கொடி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் டி.எஸ்.பி. இளங்கோவன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷோபனாவின் சாவிற்கு விஜயகுமார், அவரது தந்தை அன்பழகன், தாய் செல்வராணி ஆகிய மூவரும் தொடுத்த தாக்குதல் மற்றும் தூண்டுதலே காரணமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமார்(28), அன்பழகன்(53), செல்வராணி(46) ஆகிய மூவரையும் நேற்று போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் சோபனா இறப்பிற்கு முன்பு வெளியிட்ட வீடியோ மற்றும் ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.