Skip to main content

'பைக்'கை அடமானம் வைத்தததால் ஆத்திரம்... நண்பரை கொன்ற 7 நண்பர்கள் கைது!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
cccc

 

 

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள புதுநகரை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் காமராஜ் (வயது 22). இவர் 19.08.202 புதன்கிழமை இரவு கம்மியம்பேட்டையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு பின்புறம், தனது நண்பர்களான கே.என். பேட்டையை சேர்ந்த ரவி மகன் தேவா உள்பட 6 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். பின்னர் தேவாவின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து காமராஜ் வீட்டுக்கு புறப்பட்டார். மற்ற நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர். 

 

தேவாவும், காமராஜூம் ஜெ.ஜெ.நகரில் வந்தபோது மற்ற நண்பர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து 2 பேரையும் மறித்து தேவாவை சரமாரியாக தாக்கியதுடன், காமராஜையும் தாக்கி, தங்களது மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்று ஸ்ரீராமுலு நகர் குப்பை கிடங்கு பகுதியில் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியதுடன், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தனர். 

 

இதுகுறித்து வழக்கு பதிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் கொலையாளிகளான கம்மியம் பேட்டையைச் சேர்ந்த நரேஷ் குமார்(24), அவரது நண்பர்கள் சதீஷ் என்கிற ஹரிதாஸ்(21), பூச்சி என்கிற மூர்த்தி(21), ஜீவா என்கிற ஜீவானந்தம்(21), பாலா என்கிற பாலமுருகன்(20),  கருப்பு என்கிற கண்ணன்(31),  சிவக்குமார்(17) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரித்தனர்.

 

விசாரணையில் காமராஜ் தனது நண்பரான கம்மியம்பேட்டையை சேர்ந்த நரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிளை 30 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் பிடித்துள்ளார். இதனிடையே சில நாட்களுக்கு முன் காமராஜ் தனக்கு சொந்தமான பைக்கில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் அவரது பைக் சேதமானது. மேலும் காரும் சேதம் அடைந்துள்ளது. அதையடுத்து காமராஜிடம் காரின் உரிமையாளர் நஷ்ட ஈடு கேட்டார். அதனால் ஏற்கனவே அடமானம் பிடித்திருந்த நரேஷ்குமாரின் பைக்கை வேறு ஒருவரிடம் ரூபாய் 30,000த்துக்கு அடமானம் வைத்து அதில் ஒரு பகுதியை விபத்துக்குள்ளான கார் உரிமையாளரிடம் காமராஜ் கொடுத்துவிட்டு மீதி தொகை செலவு செய்துள்ளார். இந்த விவரம் தெரியவந்து நரேஷ்குமார் ஆத்திரமடைந்து காமராஜரிடம் சென்று, "ஏன் என்னுடைய பைக்கை இன்னொருவரிடம் அடமானம் வைத்தாய்?" என தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாகியது.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காமராஜ், அவரது நண்பர் தேவா மற்றும் நரேஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் குப்பை கிடங்கின் பின்புறம் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். மது அருந்திவிட்டு போதையில் காமராஜ் மற்றும் அவரது நண்பர் தேவா இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது தான் காமராஜையும், தேவாவையுயும் வழிமறித்து தாக்கி பின்னர் காமராஜை கொலை செய்துள்ளனர் என தெரியவந்தது. இளம் வயது நண்பர்களுக்குள் நடந்த இந்த கொலை சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்