இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மளின் 60- ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று (20/02/2021) கடலூரில் நடந்தது.
இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு அஞ்சலை அம்மாள் மன்றத்தின் தலைவர் வே.மணிவாசகம் தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் தலைவர் சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நினைவேந்தல் கூட்டத்தில் அஞ்சலை அம்மாளின் பெயர்த்தி மங்கையர்க்கரசி வரவேற்புரையாற்றினார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மகிளா காங்கிரஸின் மாநில தலைவர் சுதா, திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜான்சிராணி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சந்தானம், தனவேல், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் உ.பலராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலை அம்மாளின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை விளக்கிப் பேசினர்.
மேலும் அஞ்சலை அம்மாளின் போராட்ட வரலாற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அனைவரும் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் அவரது உருவச்சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.
கூட்டத்தில் தமிழக அரசு விடுதலை போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் போற்றும் வகையில், கடலூரில் நூலகத்துடன் கூடிய நினைவு இல்லம் அமைத்து தர வேண்டும், அவரது பிறந்தநாளான ஜூன் மாதம் 1- ஆம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும், அவரது நினைவுநாளான பிப்ரவரி மாதம் 20- ஆம் தேதியும் அரசு நிகழ்வாகக் கடைபிடிக்க வேண்டும், கடலூரில் அமைய உள்ள பேருந்து நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும், அவரது வரலாற்றை நினைவூட்டும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு அரசுப் பள்ளிக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும், அவரது வரலாற்றை தமிழக அரசு பாடப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், "விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாளின் தியாகத்தைப் போற்றும் வகையில், கடலூரில் அவருக்கு நூலகம் மற்றும் நினைவு மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என்றார்.