Skip to main content

யூடியூப் பார்த்துத் துப்பாக்கி தயாரித்த மூன்று பட்டதாரி இளைஞர்கள் கைது

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

kadampuliyur


கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெற்றிவேல், சிவப்பிரகாசம், வினோத். இவர்கள் மூவரும் பட்டதாரி இளைஞர்கள். நெருக்கமான நண்பர்களான இவர்கள் கரோனா தடை உத்தரவு காரணமாக வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தனர்.
 


கரோனா காலத்தில் வெளியில் போகவும் முடியாது, வேலையும் இல்லை என்பதால் இவர்கள் யூடியூப் சேனல்களைப் பார்த்து வந்துள்ளனர். அதன் வழியாக பிளாஸ்டிக் பைப்புகள் அதற்கான உபகரணங்களை வாங்கி நான்கு துப்பாக்கிகளை தயாரித்துள்ளனர். அதை வைத்து முந்திரி காட்டில் முயல் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி உள்ளனர். இந்தத் தகவல் காடம்புலியூர் போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நான்கு துப்பாக்கிகளையும் அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்கள் இதேபோன்று துப்பாக்கி தயாரித்து வேறு யாருக்காவது விலைக்கு விற்பனை செய்து உள்ளார்களா? இவர்கள் மட்டுமே பயன்படுத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 


இளைஞர்களான இவர்கள். ஆக்கபூர்வமான வழிகளில் மக்களுக்குப் பயன்படும் வகையில் எவ்வளவோ புதுமையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கலாம். அதன் மூலம் சாதனையாளர்களாக உயரலாம். அதோடு அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும். ஆனால் துப்பாக்கி தயாரித்தது இவர்களை தீயவழியில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். பொதுவாக ஒவ்வொரு மனிதனும் எந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களைக்கொண்டு அளவுக்கதிகமான கோபம் வரும்போது அதனால் மற்றவர்களைத் தாக்குவார்கள். இதனால் பல விபரீத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

அதனால்தான் மகாத்மா காந்தி இந்திய மக்களுக்கு அகிம்சை வழியைக் காட்டினார். ஆனால் இப்படிப்பட்ட பல இளைஞர்கள் தீயவழியில் தங்கள் ஆற்றலைச் செலவிடுகிறார்கள். இவர்கள் துப்பாக்கி தயாரிப்பதற்கு எப்படியும் பல நாட்கள் ஆகியிருக்கும். இதுபற்றி அவர்களது உறவினர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தச் செயலைத் தடுத்திருக்க வேண்டும். இக்கால இளைஞர்கள் செல்போனிலேயே மூழ்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அவர்களது பெற்றோர்கள் உறவினர்கள் அவ்வப்போது கண்காணித்துக் கண்டிக்க வேண்டும். அவர்கள் மனம்போன வழியே விட்டுவிட்டால் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி அவர்களின் வாழ்க்கை திசை மாறிப் போவதோடு பெற்றோர்களுக்கும் அவமானத்தைத் தேடித் தருவார்கள். எனவே இப்படிப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் அவர்களை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் கல்வி வேலைவாய்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்