கடலூர் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் மருந்து கடை வைத்திருந்த முருகன் என்பவர் கருக்கலைப்பு செய்ததில் அகிலா என்ற பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்களை குறித்து ஆய்வு நடத்தச் சென்றபோது மங்களூரில் போலி மருத்துவர் ஒருவர், தனது வீட்டு மாடியில் வைத்து ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தது தெரியவந்தது. அந்தப் போலி மருத்துவர் மருத்துவ அதிகாரிகளை கண்டதும் தலைமறைவாகிவிட்டார்.
கருக்கலைப்புக்கு தயாராக இருந்த பெண்ணை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விருத்தாசலத்தில் நேற்று அரசு மருத்துவமனையில் "நம்ம மருத்துவமனை மகத்தான மருத்துவமனை" என்ற இயக்கத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, ஆண்கள் பெண்கள் வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை மையம், ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 14 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர் செவிலியர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை இருப்பது குறித்து நகராட்சி சேர்மன் சங்கவியும், கவுன்சிலர் சிங்காரவேலும் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அப்போது ஆட்சியர் கூறும்போது, “மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 35 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் ராமாநத்தத்தில் மெடிக்கல் ஷாப்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்து இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்று அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வது குறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேப்பூர் மெடிக்கல் ஷாப்பில் சிகிச்சை பெற்ற சிறுவன் இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர்களில் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையில் ஒரு குழு ரகசியமான முறையில் மாவட்டம் முழுவதும் போலி மருத்துவர்கள் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்பவர்கள் குறித்த தகவலை சேகரித்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும்” என்று எச்சரித்தார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த ஆய்வின்போது, மாவட்ட சுகாதார பணிகள், துணை இயக்குநர் டாக்டர் மீரா, விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவர் எழில், நகராட்சி கமிஷனர் சசிகலா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.