கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மத்திய சிறைச்சாலை. இந்த சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ள நிலையில் உயர் பாதுகாப்பு அறை, பாதுகாப்பு அறை, பொது அறைகள் என சிறையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் உயர் பாதுகாப்பு அறையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களும், பாதுகாப்பு அறையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பணிபுரிந்து வரும் மணிகண்டன் சிறை அருகிலேயே உள்ள சிறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் இவரது மனைவி பவ்யா, 2 மகன்கள் மற்றும் தந்தை ராமலிங்கம், தாய் சாவித்திரி ஆகியோரும் வசித்து வருகின்றனர். மணிகண்டன் கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான சுவாமிமலைக்கு சென்றிருந்தார். வீட்டில் மற்ற அனைவரும் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (28.8.2022) அதிகாலை வீட்டின் ஒரு அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது மணிகண்டனின் தாயார் சாவித்திரி பாத்ரூம் செல்வதற்காக எழுந்துள்ளார். அப்போது பெட்ரோல் வாசனை அடித்ததால் சமையல் அறைக்கு சென்று பார்த்தார். சமையலறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின் பகுதியில் சிலர் தப்பி ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் கூச்சலிட்டதை கேட்டு வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சமையல் கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக வெளியே அப்புறப்படுத்தினர். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயில் சமையல் அறையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகியது.
இதுகுறித்து கடலூர் முத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டின் அருகிலேயே பெட்ரோல் கொண்டு வந்த பாட்டில்கள் கிடந்ததால் இது திட்டமிட்ட தீவைப்பு என்பதை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கடலூர் மத்திய சிறையில் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி உதவி ஜெயிலர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது 18 கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள எண்ணூர் தனசேகரன் என்ற பிரபல ரவுடியிடம் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன், பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது கைப்பற்றப்பட்டவுடன் எண்ணூர் தனசேகரன் மணிகண்டனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மணிகண்டனை தாக்க வந்துள்ளார். இதையடுத்து அவரை கண்டித்த மணிகண்டன் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து புகார் அளித்ததால் அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனசேகரனின் வழக்கறிஞர்கள் அடுத்த 2 நாட்கள் கழித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் எண்ணூர் தனசேகரனை ஜெயிலர் மணிகண்டன் தாக்கியதாகவும், அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவை முதுநகர் போலீசார் வாங்க மறுத்ததால் அதனை தொடர்ந்து தாங்கள் மனித உரிமை ஆணையத்தில் இது குறித்து புகார் செய்ய போவதாக தெரிவித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு எண்ணூர் தனசேகரனின் கூலிப்படை தான் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி தேன்மொழி, சிறைத்துறை டி.ஐ.ஜி தாமரைக்கண்ணன், மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். சிறை காவலர் குடியிருப்பில் உதவி ஜெயிலர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.