கடலூரில் தமாகா மத்திய மாவட்டத்தில் உள்ள மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் தமாகாவிலிருந்து விலகி தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி முன்னிலையில் காங்கிரசில் சேர்வது என முடிவு செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து கீரப்பாளையத்தில் உள்ள அழகிரி வீட்டில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் குடும்பத்திற்கு நெருக்கமான பிரமுகர்கள், மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெமினிராதா, சிதம்பரம் நகர தலைவர் தில்லை மக்கீன் உள்ளிட்ட வாசனுக்கு நெருக்கமான மத்திய மாவட்டத்தில் உள்ள கட்சியினர் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளனர். மேலும் சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை சார்ந்த அனைவரும் கட்சியை கூண்டோடு கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் மாநில நிர்வாகி ஜெமினிராதா கூறுகையில், மத்திய மாவட்ட கட்சியில் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக சிலர் செயல்படுகிறார்கள். அவர்கள் குறித்து தலைமைக்கு புகார் தெரிவித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்து காங்கிரஸ் கட்சியில் சேர்வதாக அறிவித்துள்ளதாக கூறினார்.