கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி செல்வி தம்பதிக்கு 25 வயதில் மகன் ஒருவன் உள்ளார். இந்த வாலிபரும், அதே கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த மாதம் கொளஞ்சி தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டார்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்நிலையில் வாலிபரின் தாய் செல்வியிடம் பெண்ணின் தந்தை கொளஞ்சி தகராறு செய்து, பின்னர் செல்வியை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதேசமயம் கட்டி வைத்து அடித்ததால் காயமுற்ற செல்வி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று திடீரென மருத்துவர்கள் சிகிச்சை முடிந்ததாகக் கூறி செல்வியின் உடல் நலம் குணமாகிவிட்டது என்று மருத்துவமனையை விட்டு வெளியேற்றினார்கள். ஆனால் செல்விக்கு உடலில் உள்ள ரத்தக் கட்டுகள் கரையாமல் உள்ள நிலையில் மருத்துவர்கள் வெளியேற்றுவதாக கூறி கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் வட்ட செயலாளர் அசோகன் மற்றும் மாதர் சங்கத்தினர் ஒன்று திரண்டு செல்வியை மருத்துவம் பார்க்காமல் வெளியே போக சொன்னதை கண்டித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை முன்பு செல்வியின் தலைமையில் கம்யூனிஸ்ட் மற்றும் மாதர் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மருத்துவர்கள் செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை முன்பு அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.