கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் எனும் ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சொந்தமாக பசுக்களை பெருமளவில் வளர்த்து வருகிறார். இதன் மூலம், தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த பசுவின் பாலை ஆவின் மற்றும் தனியார் பால் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், ராஜேந்திரன் வளர்த்துவரும் பசு ஒன்று, இன்று காலை ஒரு கன்றை ஈன்றது. பொதுவாக பசுக்கள் கன்றை ஈன்றதும் சில நொடிகளிலேயே அந்த கன்று குட்டிகள் தட்டுத்தடுமாறி எழுந்து நடக்கத் தொடங்கும். அதன் பிறகு துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கும். சில நாட்களில் அந்தக் கன்றை பிடித்து கட்டி வைக்க முடியாத அளவிற்கு சந்தோஷமாக அங்குமிங்கும் தெருக்களில் ஓடும் குதியாட்டம் போடும்.
ஆனால், இராஜேந்திரனின் பசு ஈன்றுள்ள அந்தக் கன்றுக்கு நான்கு கால்களும் இல்லை. ஆனால் நல்ல நிலையில் நீண்டு படுத்தபடியே கிடக்கிறது. அதனால் எழுந்து தன் தாயின் மடியில் சுரந்து உள்ள பாலை கூட குடிக்க முடியாத அவல நிலையில் உள்ளது. அந்த கன்றை ஈன்ற பசு அதனை சுற்றி சுற்றி வருகிறது. தான் ஈன்ற அந்த கன்றுக்கு எப்படி பால் கொடுப்பது என்று அந்த பசு தவித்து வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவைக்கிறது. இந்த அதிசயக் கன்றை கவலையோடு ஊர் மக்கள் கும்பல் கும்பலாக வந்து பார்த்து செல்கிறார்கள். இதை எப்படி காப்பாற்றுவது எப்படி வளர்ப்பது என்ற குழப்பமான நிலையில் உள்ளேன் என்கிறார் பசுக்களை வளர்த்து வரும் இளைஞர் ராஜேந்திரன்.