விருதுநகரில் மக்களின் தொடர் போராட்டத்தை மீறி செயல்பட்ட தனியார் மதுபான கூடம் பொதுமக்களாலேயே அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணயாபுரம் அருகே தனியார் மதுபான கூடம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட அன்றிலிருந்தே அப்பகுதி மக்கள் அந்த மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அருகிலேயே பள்ளி மற்றும் கோவில்கள் இருப்பதால் உடனடியாக தனியார் மதுபானக்கூடம் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் எதிர்ப்பை மீறி மதுபான கூடம் செயல்பட்டு வந்தது. இது தொடர்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.
இப்படி பல முயற்சிகள் எடுத்தும் அந்த மதுபானக்கூடம் மூடப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த தனியார் மதுபான கூடத்தை செங்கற்களால் அடித்து நொறுக்கினர். 50 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மதுபாட்டில்கள், சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் மண்ணெண்ணெய் கேனுடன் அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்தின் முன் பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தாசில்தார், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்திற்கு சீல் வைத்தனர்.